மதுரையில் வக்பு வாரிய அதிகாரிகளை கண்டித்து கோபுரத்தில் ஏறி போராட்டம்

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் பள்ளிவாசல் விவகாரத்தில் வக்பு வாரிய அதிகாரிகளை கண்டித்து பள்ளிவாசல் கட்டிட கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.

மதுரை தெற்குவாசல் பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தது. தர்ஹா நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கு விவரம் சமர்ப்பித்தலில் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பான விசாரணையை தொடர்ந்து, பள்ளிவாசல் நிர்வாகத்தை வக்பு வாரியம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நோட்டீஸ் ஒட்டி அலுவலகத்திற்கு பூட்டு போட்டது.

இந்நிலையில், முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் வக்பு வாரியம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரையிலும் முகைதீன் ஆண்டவர் தர்கா, பள்ளிவாசல் மின்னா நூர்தீன் தர்கா வளாகத்தில் விரும்ப தகாத செயல்களில் தனி நபர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது தெற்கு வாசல் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்தது.

இந்நிலையில் வக்பு வாரிய அதிகாரிகளை கண்டித்தும், அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக கூறி ஜமாத் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் தெற்குவாசல் தர்ஹா மினராவில் (கோபுரம்) ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கச் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜமாத் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ”இது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் டிச.27-ல் விசாரணைக்கு வருகிறது. அதற்குள் விதிகளை மீறி தர்கா நிர்வாகத்தை கையகப்படுத்தும் முயற்சியில் வக்பு வாரியம் ஈடுபடுகிறது. இவர்களுக்கு காவல்துறையினர் ஆதரவாக உள்ளனர். தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE