புதுச்சேரி: பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை புதுச்சேரி திமுக எடுத்துள்ளது என்று அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது: "புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963ல் எல்லையில்லா அதிகாரங்கள் பேரவைத் தலைவருக்கு இருப்பதாகவும், அனைத்து அரசு விழாக்களிலும் பேரவைத் தலைவரை அழைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவர் செல்வம் கூறி வருகிறார். அவ்வாறு யூனியன் பிரதேச சட்டம் 1963 பிசினஸ் ரூல்சில் இல்லை.
இது சம்பந்தமான ஆதாரத்தை பேரவைத் தலைவர் நிரூபிக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய ஆதாரத்தை காண்பிக்காமல் அரசு விழாக்களில் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மேடையில் எந்த வரிசையில் முன்னுரிமை அளித்து இருக்கை ஒதுக்கீடு செய்வது என்பது சம்பந்தமான பொது நிர்வாகத்துறையில் உள்ள செய்தி மற்றும் விளம்பரத் துறையினரால் வெளியிடப்பட்ட அரசாணையை காண்பித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பேரவைத் தலைவர் மீது சுயேச்சை எம்எல்ஏக்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸும், திமுகவும் ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக எதிர்கட்சித் தலைவர் சிவா கருத்து தெரிவிக்கும் போது பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக ஆதரிக்காது என பாஜகவுக்கு ஆதரவான ஒரு நிலைபாட்டை எடுத்துள்ளார். இதை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் உணர்ந்து கொள்வது நல்லது” என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.
» தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தை அரசியலாக்குகிறார்கள்: அமைச்சர் கோவி.செழியன் சாடல்
» டங்ஸ்டன் சுரங்க ஏலம்: மத்திய, மாநில அரசுகளின் கூட்டு சதி அம்பலம்: பி.ஆர்.பாண்டியன் கோபம்