வெளியூர் செல்வோர் கவனத்துக்கு: வார இறுதி நாட்களையொட்டி 586 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

By எஸ்.ஆனந்த விநாயகம்

சென்னை: வார இறுதி நாட்களையொட்டி 586 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘வரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் டிச.27, 28 தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 485 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 81 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

இவ்வார இறுதியில் பேருந்துகளில் பயணிக்க 24,500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்துக்கு www.tnstc.in என்ற இணைய தளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE