அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: திமுக அரசை குற்றம்சாட்டிய இபிஎஸ்

By KU BUREAU

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின் நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த ஸ்டாலின் மாடல் அரசு, எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம். பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE