டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

By KU BUREAU

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் இதர நிகழ்வுகள் குறித்து மாதந்தோறும் மத்திய உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை அனுப்புவது வழக்கம். இதனிடையே அவ்வப்போது பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரையும் ஆளுநர் சந்திப்பார். அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு 4 நாள் பயணமாகச் சென்ற ஆளுநர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் சமூக வலைதளப் பக்கத்தில், "ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பயனுள்ள ஆலோசனையை மேற்கொண்டார். மாநில மக்கள், தமிழ் மொழி, இலக்கியம் மீது அளவற்ற அன்பு செலுத்தும் பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரதமரிடம் தமிழகத்தின் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஆகியவை குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது நடைபெறும் சம்பவங்கள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்நிலையில், வரும் ஜன.6-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். இந்நிலையில் பிரதமருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுதவிர உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் ஆளுநர் ரவி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆளுநர் பதவிக்காலம் முடிந்து தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சரிடம் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE