குமரியில் கனிம வளங்களை எடுக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும்: இபிஎஸ் கோரிக்கை

By KU BUREAU

சென்னை: கன்னியாகுமரி கிள்ளியூர் தாலுகாவில் இந்திய அரிய மணல் ஆலைக்கு, கனிம வளங்களை தோண்டி பிரித்தெடுப்பதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி மாவட்டம், சின்னவிளை, பெரியவிளை கடற்கரை கிராமங்களில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான டன் தாது மணலை தினசரி தோண்டி எடுத்ததால், 72 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் உள்ள 48 மீனவ குடியிருப்புகளில் 200 மீட்டருக்கு மேல் கடற்கரையும், குடியிருப்புகளும் கடலுக்குள் சென்றுவிட்டது என்றும்; இதனால் சாதாரணமாக ஒருசில நேரங்களில் பெரும் அலைகள் வரும்போது, கடல்நீர் அருகிலுள்ள கடற்கரை மீனவ குடியிருப்புகளில் புகுந்துவிடுவதால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், தங்களது மீன்பிடித் தொழிலும் பெருமளவு பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இணையம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களில் 1144 ஹெக்டேர் நிலங்களில் அணு கனிமங்களை தோண்டி எடுக்க, மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை (IREL) தொடர்ந்து கடற்கரைப் பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் 40 அடி ஆழம் வரை மணலைத் தோண்டி எடுப்பதால், மாவட்டத்தின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் புகார் கூறியதோடு, அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யக் கோரி இவ்வாண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் தொடர்ந்து 4 மாதங்களாக போராடி வரும் நிலையில், திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு, அணு கனிமங்கள் அள்ள வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய எவ்விதமான முயற்சியையும் எடுக்காததைக் கண்டித்து, ‘குமரி மாவட்ட அணு கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம்’ 31.12.2024 அன்று பொதுமக்களை ஒன்று திரட்டி, மணவாளக்குறிச்சி மணல் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று, பாதிப்புகளை ஏற்படுத்தும் அரியவகை அணு கனிம வளங்களை தோண்டிப் பிரித்தெடுக்க, மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE