கரூர்: பாஜக, ஆர்எஸ்எஸ் அரசியல் சாசனத்திற்கு எதிரானவர்கள் என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
கரூர் எம்.பி. செ.ஜோதிமணி கரூரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (டிச. 24ம் தேதி) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: ''நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசன விவகாரத்தில் அம்பேத்கரை அவமரியாதையாக இழிவுப்படுத்தி மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாஜக, ஆர்எஸ்எஸ் அரசியல் சாசனத்திற்கு எதிரானவர்கள். அதனால் தான் 400 சீட்டுக்கு மேல் வந்தால் அரசியல் சாசனத்தையே மாற்றி அமைப்போம் என தெரிவித்தனர். தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு எதிரான மனநிலையையே கொண்டுள்ளனர்.
நேரு, அம்பேத்கரை அவமதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மனுநீதிக்கு நேர் எதிரானதாக அரசியல் சாசனம் அமைந்துள்ளது. சமூக நீதி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஐகானாகவும், அடையாளமாவும் திகழ்கிறார். ராகுல்காந்தி மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
» தலித்களுக்கு அதிகம் கொடுமைகள் இழைக்கும் மாநிலம் தமிழ்நாடு: கே.பாலகிருஷ்ணன் சுளீர்
» ‘செட்’ தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமே நடத்தப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கல்விக்கு எதிரானது. தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி என்கின்றனர். ஆனால் தமிழ் பேசும் நம்மிடம் இருந்து ஜிஎஸ்டி மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். இதேபோல் தான் நீட் தேர்வினை திணித்தனர்'' என்கின்றனர்.