அவிநாசியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டு - சிசிடிவி காட்சிகளில் பதிவு

By இரா.கார்த்திகேயன்

அவிநாசி: அவிநாசியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், வாகனத்துக்குள் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை இன்று (டிச.24) ஒன்றரை நிமிடத்துக்குள் திருடிவிட்டு அங்கிருந்து தப்பியது தொடர்பாக, அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அவிநாசி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம்(55), விவசாயி. அவிநாசியில் உள்ள வங்கிக்கு இன்று சென்று தனது சொந்த தேவைக்காக ரூ. 2 லட்சம் எடுத்துக்கொண்டு, வாகனத்தின் பின் இருக்கைக்கு கீழ் வைத்து பூட்டி உள்ளார். தொடர்ந்து அதே பகுதியில் கடை அருகே இருசக்கர வாகனத்தை பணத்துடன் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்து, 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 மர்ம நபர்கள், பின் இருக்கையின் பூட்டை உடனடியாக உடைத்து அதில் இருந்த ரூ. 2 லட்சத்தை சட்டையில் மறைத்து வைத்து எடுத்து சென்றனர். சண்முகம் வெளியே வந்து இருசக்கர வாகனத்தை பார்த்தபோது, பின் இருக்கையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வண்டியில் வைக்கப்பட்டிருந்த பணமும் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது, சண்முகத்தை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்த 6 மர்மநபர்கள், வெறும் ஒன்றரை நிமிடங்களுக்குள் பணத்தை திருடிவிட்டு மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE