குலத்தொழிலுக்கு தள்ளும் சதித்திட்டம் : 5, 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி ரத்துக்கு வேல்முருகன் கண்டனம்!

By KU BUREAU

சென்னை: 8ம் வகுப்பு வரை கட்டாயச் தேர்ச்சி முறை இருக்கும் என்று தமிழக அரசு கூறியிருப்பது வரவேற்கதக்கது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக, டிசம்பர் 23ம் தேதி அன்று மத்திய அரசு அறிவித்திருந்தது. கல்வித் தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை கிராமப் புற ஏழை மாணவர்களை கொத்து கொத்தாக பள்ளிகளை விட்டு வெளியேற்றுவதாகும். மேலும், குழந்தை தொழிலாளர் என்ற வன்கொடுமைக்கு தள்ளப்படும். புரியும் படி கூற வேண்டுமானால், கட்டாயத் தேர்ச்சிக்கு முன் குழந்தைகள் படிப்பறிவு இன்றி, பள்ளிக்கு வெளியே அலைந்தனர்.

குழந்தை தொழில் என்னும் வதை முகாம்களில் சீரழிந்தனர். தற்போது போதுமான கற்றல் அடைவுகள் இன்றி, பள்ளிக்கு உள்ளே உள்ளனர். அதாவது, 8ம் வகுப்பு வரை தேர்ச்சி என்ற அரசின் கொள்கையால் பள்ளி சேர்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் படிக்க லாயக்கு அற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு குழந்தைத் தொழிலாளியாய் அலையும் அவலம் வெகுவாக குறைந்துள்ளது.

8ம் வகுப்பு வரை ஏன் தேர்ச்சி தர வேண்டும் என உன்னதம் தெரியாமல், அதன் அழமான பொருள் புரியாமல், கட்டாய தேர்ச்சியை காலி செய்ய மத்திய அரசு முயலுவது கண்டனத்துக்குரியது. பள்ளிக்குள் வந்துவிட்ட ஒரு குழந்தைக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்ற கற்றல் அடைவுகளை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. எல்லாக் குழந்தைகளுக்கும் சம திறன் உடையவை. சாதி, சமய, மத மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சம வாய்ப்பை குழந்தைகள் இழந்துள்ளன.

இதனை அரசு சரி செய்தால் எல்லாக் குழந்தைகளுக்கும் அந்தந்த வகுப்புக்கும் உரிய கற்றல் அடைவுகளுடன் தேர்ச்சி பெறும். பெயில் என்ற அச்சுறுத்தல் கருவி அவசியம் இல்லை. இவற்றை செய்ய அரசு தனது பொதுச்செலவில், கலைத் திட்டத்தில், பாடத் திட்டத்தில், பயிற்று முறைகளில் மொழியைக் கையாள்வதில், மக்களின் பண்பாட்டுக் கூறுகளை உற்று நோக்குவதில், பள்ளியின் உள் கட்டமைப்பு, கற்றல் உதவிப் பொருட்களில், மதிப்பீட்டு உத்திகள் என மாறுதல்கள் அரசுகள் கொண்டு வர வேண்டும்.

இந்த அடிப்படை உண்மையை புரிந்துக் கொள்ள முடியாத மத்திய அரசு, பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருப்பது புதிய கல்விக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கையே.
இதன் மூலம், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவர்களை குலத்தொழிலுக்கு தள்ளும் சதித்திட்டமே!

இச்சூழலில், மத்திய அரசின் அறிவிப்பு, தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்றும் 8ம் வகுப்பு வரை கட்டாயச் தேர்ச்சி முறை இருக்கும் என்றும் தமிழக அரசு கூறியிருப்பது வரவேற்கதக்கது; பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படும் அறிவிப்பை திரும்ப பெற மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE