‘செட்’ தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமே நடத்தப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: மாநில தகுதித் தேர்வு (SET) நடத்துவதற்கான போதுமான நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கொண்டுள்ளது. பல்கலைக் கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் மாநில தகுதித் தேர்வு நடத்தப்படும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 1987-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு நாளதுவரை செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வது மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சட்டக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் உள்ள கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ள உதவிப்பேராசிரியர்களை தெரிவு செய்யும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், 2011 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்திடும் முகவாண்மை நிறுவனமாக (Nodal Agency) அரசால் நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்தோடு 2023-இல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மறுசீரமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணியாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.

1988 முதல் தற்போது வரை பல்வேறு நிலைகளில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கு 1,68,657 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் இந்த தேர்வு வாரியத்தால் முறையாக தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளனர். இது தவிர கடந்த ஆண்டு முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்க தகுதிபெற்ற மாணவர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு 120 மாணவர்கள் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற ஏதுவாக கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.

தற்போது தமிழ்நாடு அரசால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மாநில தகுதித் தேர்வினை (SET) நடத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாணைக்குட்பட்டு உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக பாட வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்களை ஈடுபடுத்திக் கொண்டு மேற்கண்ட தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் மூலம் நடத்த வேண்டிய தேசியத் தகுதித் தேர்வு (NET) வெளிமுகமையான தேசியத் தேர்வு முகமை (NTA) மூலமே நடத்தப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மாநில தகுதித் தேர்வு (SET) நடத்துவதற்கான போதுமான நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கொண்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்துடன் இணைத்து இணையவழி தேர்வு நடத்துவதற்கும், நேரடித் தேர்வு நடத்துவதற்கும் போதுமான வசதிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளது.

எனவே, மாநிலத் தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமே சிறப்பாகவும் முறையாகவும் நடத்தப்படும்’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE