எங்களுக்கு சீட்டே வேண்டாம்; திமுக-வை நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம் - அன்புமணி அதிரடி அறிவிப்பு

By KU BUREAU

காஞ்சிபுரம்: திமுக வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுகவிற்கு ஆதரவு அள்ளிப்போம். 15 விழுக்காடு கையெழுத்து போடுங்கள், நிபந்தனை வேண்டாம். சீட்டு கீட்டு எதுவும் வேண்டாம் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கண்டன உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “ உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்து 1000 நாட்கள் ஆகிறது.‌ இந்த 1000 நாட்களில் அதிகாரம் இருந்தும், கொடுக்க மனம் இல்லாத திராவிட மாடல் திமுக அரசுக்கு மனமில்லை இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

உள் ஒதுக்கீடு என்பது சாதி பிரச்சனை கிடையாது சமூக நீதிப் பிரச்சனை. தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது குடிசையில் வசிக்கிறார்கள். சாலை போடுவது, கொத்தனார் வேலை செய்வது உள்ளிட்ட அடிமட்ட வேலைகளை செய்து வருகிறார்கள் அவர்கள் படிப்பிலும் வேலையிலும் முன்னேற உள் ஒதுக்கீடு அவசியம்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர் சமுதாயம். மற்றொரு பெரும்பான்மை சமுதாயம் பட்டியல் இன சமுதாயம். இரண்டு சமுதாயமும் முன்னேற வேண்டும் என்று ராமதாஸ் 45 ஆண்டுகளாக போராடி வருகிறார். இவர்கள் படித்து மேலே வந்து விட்டால் உண்மை தெரிந்து விடும் நமக்கே வாக்களிக்க மாட்டார்கள் என திமுக சூழ்ச்சி செய்து வருகிறது. திமுக அரசுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை.

தமிழ்நாட்டில் சுமார் 320 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள் ; இவர்களில் 53 பேர் துறை செயலாளராக இருக்கிறார்கள். இந்த 53 பேரில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் கிடையாது. வன்னியர் சமுதாயத்தின் ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் இந்த சமுதாயம் முன்னேறக்கூடாது கடைசி வரை இந்த சமுதாயம் குடிச்சு குடிச்சு நாசமாகவே போக வேண்டும்; அடிமையாக இருக்க வேண்டுமா? இட ஒதுக்கீட்டு கொடுக்க மாட்டீர்களா?

திமுகவில் எத்தனையோ தியாகங்கள் செய்து கட்சிக்காக சிறைக்கு சென்றவர் துரைமுருகன். இன்று திமுகவிலேயே மூத்த அமைச்சராக இருக்கிறார் துரைமுருகன். திமுக விற்காக எவ்வளவோ உழைத்த துரைமுருகனுக்கும் இன்னொரு துணை முதல்வர் பதவியாவது கொடுத்திருக்கலாமே? அவர் வன்னியர் சமுதாயத்தில் பிறந்ததால் துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.

திமுக வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுகவிற்கு ஆதரவு அள்ளிப்போம். 15 விழுக்காடு கையெழுத்து போடுங்கள், நிபந்தனை வேண்டாம். சீட்டு கீட்டு எதுவும் வேண்டாம் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். அப்படி செய்யவில்லை என்றால், வீடு வீடாக செல்வோம் தெருத்தெருவாக செல்வோம். ஸ்டாலின் வன்னியர் விரோதி என வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம். மானமுள்ள ஒரு வன்னியர் கூட, திமுகவிற்கு வாக்களிக்க மாட்டான்” என்று அன்புமணி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE