பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய 3 சகோதரர்களும் சடலமாக மீட்பு: மரக்காணத்தில் சோகம் - முதல்வர் இரங்கல்

By KU BUREAU

மரக்காணம்: பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் அவர்கள் உடல் மீட்கப்பட்டது.

மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் லோகேஷ் (24) விக்ரம் (22) சூர்யா (22). இவர்களில் விக்ரம் மற்றும் சூர்யா இரட்டை சகோதரர்களாவர். இந்நிலையில், சகோதரர்கள் டிசம்பர் 22ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை மரக்காணம் - திண்டிவனம் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் வலை வைத்து மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், எதிர்பாராத விதமாக லோகேஷ் பக்கிங் காம் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். வெள்ளத்தில் சிக்கி லோகேஷ் வெளியில் வர முடியாமல் உயிருக்கு போராடி உள்ளார்.

அண்ணன் லோகேஷ் நீரில் மூழ்கி உயிருக்கு போராடியதை பார்த்த தம்பிகள் இருவரும் அண்ணனைக் காப்பாற்ற அடுத்தடுத்து குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சகோதரர்களின் உறவினர்களுக்கும் மரக்காணம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் போலீஸாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அன்று இரவு முதல் நீரில் மூழ்கி மாயமான மூன்று பேரையும் தேடும் பணியில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் வெள்ளத்தில் மூழ்கி மாயமான சகோதரர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுவை சென்னை இசிஆர் சாலையில் மரக்காணம் பூமி ஈஸ்வரர் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.

தகவலறிந்த மரக்காணம் வட்டாட்சியர் பழனி, கோட்டகுப்பம் போலீஸ் டிஎஸ்பி உமாதேவி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ அர்ஜுனனிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக அதிகாலை முதல் பத்துக்கு மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு நிலைய வீரர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

24 மணி நேர போராடத்துக்கு பிறகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன. போலீசார் அவர்களின் உடல்களை புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் 3 சகோதரர்களும் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. உயிரிழந்த இவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE