தமிழகத்தில் விரைவில் 1,000 மக்கள் மருந்தகங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By KU BUREAU

தமிழகத்தில் 1,000 மக்கள் மருந்தகம் விரைவில் தொடங்கப்படும். 220 ஜெனரிக் மருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில், தேசிய மருந்தாளுநர் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநாட்டு அறிவியல் மலரை வெளியிட்டு, சிறந்த மருந்தாளுநர்கள், மருத்துவம் சார்ந்த பல்வேறு துறையில் உள்ள மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருந்தியல் மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி, பதிவாளர் கே.சிவசங்கீதா, இந்திய மருந்தியல் கழகத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன், துணைத் தலைவர் ஜெ.ஜெயசீலன், மருந்தியல் கல்லூரியின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் அமைச்சர் பேசியதாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக உலகின் பல்வேறு நாடுகளை ஒருங்கிணைத்து, உலகின் பல்வேறு மருத்துவ வல்லுநர்களை அறிவியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய மருத்துவ மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட மருந்தியல் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. புதிய மருந்து கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சி தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டியதாக உள்ளது.

200 நாடுகளுக்கும் மேல் இந்திய மருந்துகள் 100 சதவீதம் சென்றடைந்துள்ளன. அமெரிக்கா கூட 40 சதவீத ஜெனரிக் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து வாங்குகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்திய மருந்துகள் 30 சதவீதம் உள்ளன. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தற்போது தமிழகத்தின் மருத்துவத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் அரசு மருந்தாளுநர் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏராளமான தனியார் வேலைவாய்ப்புகளும் உள்ளன. எனவே அரசு வேலையை மட்டுமே எதிர்பார்க்காமல் அதனையும் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். தற்போது படிக்கும் மருத்துவ மாணவர்களின் தகுதி, திறமையைக் கொண்டு, காலி பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அண்மையில் 946 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 24 ஆயிரம் மருத்துவம் சார்ந்த பணி நியமனங்கள் முறையாக நடைபெற்றுள்ளன. கலந்தாய்வு மூலம் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனவரி 5-ம் தேதி 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் 1,000 இடங்களில் மக்கள் மருந்தகம் தொடங்கப்படும் என்று சுதந்திர தினத்தன்று முதல்வர் அறிவித்திருந்தார். மக்கள் மருந்தகத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 ஜெனரிக் மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் ஒருங்கிணைந்து மக்கள் மருந்தக சேவையை விரைவில் தொடங்கவுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE