சென்னை: எம்ஜிஆரின் 37-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆர் வாழ்க்கை ஒரு சகாப்தம் என அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களில் எம்ஜிஆர் பெயர் முக்கியமானது. மூன்று முறை தமிழக முதல்வர் பொறுப்பிலிருந்தும் தான், தனது குடும்பம் என்று எண்ணாமல், தமிழக மக்களுக்காக உழைத்தவர். பெருந்தலைவர் காமராஜரைப் போலவே, நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் எம்ஜிஆர். சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர். வறுமை ஒழிப்பு மற்றும் சமூக சமத்துவத்தை இலக்காகக் கொண்ட நேரடி நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். அவரது நிர்வாகம், சமூகத்தின் விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியது.
ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியது என்றால் மிகையாகாது. தமது ஆட்சியில், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மொழி மற்றும் கலைகளை ஊக்குவித்தார். முதல்வராக இருந்தபோது சமூக நலன், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் அர்ப்பணிப்புடன் இருந்தது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிட்டதோடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தியதும் பிரதமர் மோடிதான். எம்ஜிஆரின் உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம்.
» அரசு ஊழியர்களின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரம் அல்ல: உயர் நீதிமன்றம் உத்தரவு
» திருநெல்வேலி அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றம்: கேரள அரசு அதிகாரி உட்பட 5 பேர் கைது