வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: கரூரில் 3 பெண்கள் உள்பட 16 பேர் கைது

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: வேளாண் சந்தைப் படுத்ததுல் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நகல் எரிப்புப் போராட்டத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை மாயனூர் போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சந்தைப் படுத்துதல் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு சார்பில் இன்று (டிச. 23ம் தேதி) கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கே.சுப்பிரமணி தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் ஏ.நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி, மாவட்ட செயலாளர் சக்திவேல், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜி.தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினரிடம் இருந்து மாயனூர் போலீஸார் நகலை பிடுங்கி 3 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை கைது செய்தனர்.

கிரேட்டர் நொய்டாவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் விடுதலை செய்யவேண்டும். விவசாய தலைவர் ஜகஜித்சிங் தலேவாலின் 20 நாட்களாக இருந்து வரும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து விவசாய அமைப்புடன் பேச்சுவார்த்தை உடனே தொடங்கவேண்டும். விவசாயிகள் போராட்டத்தின் மீதான அடக்குமுறையை நிறுத்திக் கொளளவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE