காஞ்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம்

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகள் அலைக்கழிக்கப்படுவதை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறப்போவதாக மாற்றுத் திறனாளிகள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று (டிசம்பர் 23ம் தேதி) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் வில்சன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக் கேட்டு பல மாதங்களுக்கு முன்னரே மாற்றுத் திறனாளிகள் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்பட பலரை அணுகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும், அதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறப்போவதாகவும் மாற்றுத் திறனாளிகள் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் அனைவரும் காவலான் கேட் அருகே கூடினர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE