தமிழகத்தில் வேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்.. 2 பேர் பலி!

By KU BUREAU

தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பாதிப்பு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், புதுகாலக்கவுண்டன்பட்டி குஜிலியம்பாறையைச் சேர்ந்த பழனிசாமி (61) காய்ச்சல் காரணமாக கடந்த டிசம்பர் 10ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்திருந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதே போன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவரும் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் வசித்த பகுதிகளைச் சுற்றிலும் கிருமிநாசினி தெளிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களின் ரத்த மாதிரிகளையும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், காய்ச்சல், தலை வலி, உடல் வலி, தசை வலி, வாந்தி, தொண்டை வலி போன்றவை உண்ணி காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் எனவும், இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லவும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சாதாரண காய்ச்சல் என அலட்சியப்படுத்தி தாங்களாகவே மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE