விழுப்புரம்: மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் லோகேஷ் (24) விக்ரம் (22) சூர்யா (22). இவர்களில் விக்ரம் மற்றும் சூர்யா இரட்டை சகோதரர்களாவர்.
இந்நிலையில், சகோதரர்கள் நேற்று மாலை மரக்காணம் - திண்டிவனம் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் வலை வைத்து மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், எதிர்பாராத விதமாக லோகேஷ் பக்கிங் காம் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். வெள்ளத்தில் சிக்கி லோகேஷ் வெளியில் வர முடியாமல் உயிருக்கு போராடி உள்ளார்.
அண்ணன் லோகேஷ் நீரில் மூழ்கி உயிருக்கு போராடியதை பார்த்த தம்பிகள் இருவரும் அண்ணனைக் காப்பாற்ற அடுத்தடுத்து தண்ணீரில் குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சகோதரர்களின் உறவினர்களுக்கும் மரக்காணம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் போலீஸாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் நீரில் மூழ்கி மாயமான மூன்று பேரையும் தேடும் பணியில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் வெள்ளத்தில் மூழ்கி மாயமான சகோதரர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுவை சென்னை இசிஆர் சாலையில் மரக்காணம் பூமி ஈஸ்வரர் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.
» கன்னியாகுமரியில் நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
» சென்னை உட்பட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
தகவலறிந்த மரக்காணம் வட்டாட்சியர் பழனி, கோட்டகுப்பம் போலீஸ் டிஎஸ்பி உமாதேவி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ அர்ஜுனனிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் புதுவை சென்னை இசிஆர் சாலையில் சுமார் 45 போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஆனதாலும், பனிப் பொழிவு காரணமாகவும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக அதிகாலை முதல் பத்துக்கு மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு நிலைய வீரர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கால்வாய் பகுதியில் பொதுமக்கள் குவிந்துள்ளதால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.