சென்னை: தமிழகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றம் நுழைவாயில் அருகே மாயாண்டி என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து இந்த கொலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். போலீஸ் தரப்புக்கு பல கேள்விகளை எழுப்பி, நீதிமன்றங்களில் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்யும்வரை, தற்காலிகமாக, மாவட்ட நீதிமன்றங்கள், முக்கியமான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, துப்பாக்கி ஏந்திய போலீஸாரை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்ற வளாகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் கூறுகையில், ‘அதிகளவில் கூட்டம் வரும் நீதிமன்றங்களில் ஏற்கெனவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக எஸ்.ஐ ரேங்கில் உள்ள ஒருவர் உட்பட இருவர் நவீன துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
» ‘புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற போதைப்பொருள் கடத்தல் நபரை தியேட்டருக்குள் கைது செய்தது போலீஸ்