அரசு போக்கு​வரத்து கழக தொழிற்சங்கங்களுடன் டிச.27, 28-ம் தேதிகளில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

By KU BUREAU

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.8 லட்சம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தையானது, சென்னை குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் ஆக.27-ம் தேதி நடைபெற்றது. இதில், 85 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால் அறிமுக கூட்டமாகவே நடைபெற்றது. இதில், கடந்த காலங்களைவிட சங்கங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் மாநில பிரதிநிதித்துவம் பெற்ற சங்கங்கள் பேச கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி வரும் 27, 28 தேதிகளில் குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. முதல் நாளில் தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகளும், அடுத்த நாளில் இதர சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்குமாறு பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டுநர் சார்பில் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE