சிலை திருட்டு விவகாரத்தில் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

By KU BUREAU

கோயில் சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான 41 சிலைகளை கடத்திச் சென்ற வழக்குகளில் உள்ள ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல் போய் உள்ளன. இது சம்பந்தமான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் தமிழக உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

பல கோயில்களில் திருடு போன சிலைகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள தமிழக அரசும், தமிழக காவல்துறையும் மெத்தனமாக இருந்து வருவதை விட, அதனைக் கண்டுபிடிக்க போடப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் காவல் நிலையத்திலேயே காணாமல் போயுள்ள அவலம் அரங்கேறி இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாகும். தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிலை திருட்டு வழக்கில் உள்ள ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல்துறை அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE