கிராமங்களை நோக்கி மக்கள் தீர்வு கூட்டம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: அரசு நிர்வாகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில், நல்லாட்சி வார விழாவையொட்டி கிராமங்களை நோக்கி மக்கள் குறைதீர்ப்பு முகாம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (டிச.22) நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அனைத்தும், எல்லா மக்களையும் நாட்டின் ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு மூலையில் இருக்கும் குடிமகனுக்கும் போய் சேர வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு ஒட்டு மொத்தமாக வளர்ச்சி அடையும். ஏனென்றால் கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் சாமானிய மக்களை வேகமாக, முழுமையாக சென்று சேர இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்த நம்முடைய பிரதமருக்கு இந்த நேரத்திலே நாம் நன்றி சொல்ல வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில், ஒவ்வொரு மாதம் 15-ம் தேதி மக்கள் குறை தீர்ப்பு நாளாக இருந்து வருகிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற நிகழ்ச்சி மூலமாக அதிகாரிகள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய குறைகள், தேவைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் பயன் பெறும் விதமாக பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அந்தந்த துறை சார்ந்த மத்திய, மாநில அரசு திட்டங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முயற்சியை செய்கிறார்கள். பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு, மருத்துவ பரிசோதனை, வங்கிக் கடன்கள், ரேஷன் அட்டை, சொத்து வரி, வருவாய்த்துறை சான்றிதழ் போன்ற பல தேவைகளை நிறைவேற்ற ஒன்றாக வருகின்றார்கள்.

மக்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி அரசு திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்வதில் முழுமையான ஈடுபாட்டை காட்ட வேண்டும். அரசு நிர்வாகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும்.

பெஸ்ட் புதுச்சேரிக்கான வளர்ச்சிப் பாதையை போட்டு தர வேண்டும். அப்போதுதான் பிரதமரின் விக்சித் பாரத், “வளரச்சி அடைந்த பாரதம் 2047” என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறிச் செல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார். குறைத்தீர்வு முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர் பங்கஜ்குமார் ஜா, துணைநிலை ஆளுநரின் செயலர் நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், துணை ஆட்சியர் (தெற்கு) சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

துணைநிலை ஆளுநர் அங்கு அமைக்கப்பட்டிருந்த துறைசார்ந்த குறைதீர்ப்பு அரங்குகளைப் பார்வையிட்டார். மேலும், தாயின் பெயரில் ஒரு மரம் என்ற பிரதமரின் திட்டத்தின்கீழ் மரக்கன்று நட்டார். அதனைத் தொடர்ந்து ஊசுடு ஏரியை துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE