தமிழகத்தில் 3 ஆண்டுகளில் ரூ.27.48 கோடி மதிப்பிலான 3.60 லட்சம் கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.27.48 கோடி மதிப்பிலான 3.60 லட்சம் கிலோ குட்கா, பான் மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை செனாய் நகரில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வினா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சாலையோர கடைகளையும், கடையை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும் சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சரியில்லாத உணவு பழக்கவழக்கங்களால் ஒவ்வாமை, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, புற்றுநோய், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படுகிறது. இதனால் தான் கேண்டீன், மெஸ், சாலையோர உணவகங்களில் பணியாற்றுபவர்களுக்கு பயிற்சி தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 6,323 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, 2.66 லட்சம் வணிகர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் என்னும் சான்றிதழும் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் உணவு பாதுகாப்புத் துறை மூலம் இதுவரை 7 லட்சத்து 8,763 பாதுகாப்பு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்புத் துறை மூலம் கடந்த 3 ஆண்டுகளில் உபரி உணவை வீணாக்காமல் பயன்படுத்துவோம் திட்டத்தில் 1.97 லட்சம் நிகழ்வுகள் நடத்தப்பட்டு 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சற்றே குறைப்போம் என்ற திட்டத்தில் 26,258 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுசுழற்சி செய்து பயோடீசல் தயாரிக்கும் முறையில் 29,665 லிட்டர் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டிருக்கிறது.

சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிட்டு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு 11,025 கடைகளுக்கு ரூ.14.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களின் மீது லேபிள் ஒட்டாத நிறுவனங்கள் கண்டறியப்பட்டு ரூ.26.93 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.27.48 கோடி மதிப்பிலான 3.60 லட்சம் கிலோ அளவில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் கையகப்படுத்தப்பட்டு, கடந்த ஓராண்டில் மட்டும் 26,446 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழக உணவு பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் தேவ பார்த்தசாரதி, இணை இயக்குநர் கண்ணன், மத்திய உணவு பாதுகாப்புத் துறை பயிற்சி இயக்குநர் அங்கேஸ்வர் மிஸ்ரா, துணை இயக்குநர் விரேந்திரா, தென் மண்டல இயக்குநர் வி.கே.ஃபஞ்சம், சென்னை உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE