2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும்: அண்ணாமலை கருத்து

By KU BUREAU

கோவை: 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ஜாபர் சாதிக் வழக்கில் வேகமாக விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். திமுக அடிப்படைத் தொண்டனைவிட, அந்தக் கட்சிக்கு அதிகம் வேலைபார்ப்பது சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுதான். ஆனால், அவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஆளுநர் கூறுவதுதான் சரி. ஆனால், ஆளுநரிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். கல்வியில் அரசியல் செய்வதால்தான் ஆளுநர் தனது கருத்தை தெரிவிக்கிறார். அரசியல் செய்யும் அமைச்சரை, சரியான திசையில் ஆளுநர் வழிநடத்துகிறார்.

பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம். அதேநேரத்தில், தீவிரவாதியைக் கொண்டாடுவதைத்தான் நாங்கள் தவறு என்கிறோம். கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையவரின் இறுதி ஊர்வலத்துக்கு அனுமதி அளித்தது ஏன்? திமுக, காங்கிரஸைவிட நாங்கள் சமூகநீதியில் பின் தங்கியிருக்கிறோம் என்பதை திருமாவளவன் விளக்க வேண்டும். திமுகவை எதிர்த்து அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

தீவிரவாதிகள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகின்றனர் என்று கூறுவோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அது தேசப் பிரிவினைவாதம் இல்லையா? தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா? ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட வார்த்தைகளை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்காகத்தான் அனைத்து இயக்கங்களையும் சேர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அனைத்து மதங்களும் சமம் என்று கூறுவது நான் மட்டும்தான்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பது முதல்வர் கண்ணுக்கு தெரியவில்லையா? ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் எப்படி தமிழக மக்களுக்கு எதிரியாகும்? மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும், தமிழகத்துக்கு எதிரி என்று முதல்வர் கூறுகிறார்.

அமைச்சர் ரகுபதியின் பேச்சைக் கேட்கும்போது, அவர் சட்டத் துறை அமைச்சர்தானா என்றே சந்தேகம் எழுகிறது. ரவுடிகள் பேசுவதை சட்டத் துறை அமைச்சர் பேசுகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி டெபாசிட் இழக்கும். சுப்பிரமணிய சுவாமிக்கு பிரதமர் மோடியின் மீது இருக்கக்கூடிய காழ்ப்புணர்ச்சி, நாட்டுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியாக மாறிவிடக் கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE