நாகப்பட்டினம்: நாகை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கி, அவர்களிடமிருந்து வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகு மூலம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ராஜ்குமார்(25), ராஜேந்திரன்(49), சென்னையைச் சேர்ந்த நாகலிங்கம்(45) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள், கோடியக்கரைக்கு தென் கிழக்கே 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் 6 பேர், மீனவர்களின் படகில் ஏறி, அவர்களை இரும்புக் கம்பி, அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில், 3 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, படகில் இருந்த 300 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்டவற்றை கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.
பின்னர், மீனவர்கள் 3 பேரும் நேற்று காலை கோடியக்கரைக்கு திரும்பினர். அவர்களை சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல, கோடியக்கரை அருகே 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் மற்றொரு நாட்டுப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பெருமாள்பேட்டையைச் சேர்ந்த குமார்(48), ஜெகன்(30), லட்சுமணன்(40) ஆகிய 3 பேரையும் இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கி, மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றை பறித்துக் சென்றுள்ளனர். காயங்களுடன் நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள், தாங்கள் தாக்கப்பட்ட தகவலைத் தெரிவித்தனர். இந்த 2 தாக்குதல் சம்பவங்கள் குறித்தும் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
» புதுச்சேரி ஆளுநருடன் பேரவைத் தலைவர், பாஜக அமைச்சர், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து சந்திப்பு
» “புகழ்பாடும் மன்றமாக சட்டப்பேரவை மாறியுள்ளது” - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு