Dபுதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பாஜக அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்எல்ஏ ஆகியோர் அடுத்தடுத்து ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சனிக்கிழமை சந்தித்து பேசினர்.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பேரவை விதிகளை மீறி செயல்படுவதாக காங்கிரஸ், அதிமுக கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்டப்பேரவைச் செயலரிடம் உருளையன்பேட்டை மற்றும் திருபுவனை தொகுதி சுயேச்சை எம்எல்ஏக்கள் நேரு, அங்காளன் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.
இந்தநிலையில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் இன்று ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோப்புகளில் கையெழுத்து வாங்கவே துணைநிலை ஆளுநரை சந்திக்க செல்கிறேன். துணைநிலை ஆளுநர் என்பவர் நடுநிலையானவர். அவரை யார் வேண்டுமானலும் சந்திக்கலாம். புதுச்சேரி முதல்வருடன் நெருக்கமாக இருப்பதால் பேரவைத் தலைவரான என் மீது சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
துணைநிலை ஆளுநர், பேரவைத் தலைவர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் அரசு விழாக்களிலும், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளிலும் அழைப்பின் பேரில் பங்கேற்கலாம் என விதிமுறை உள்ளது. அதனடிப்படையில் தான் பேரவைத் தலைவர் என்ற முறையில் அரசு விழாக்கள், அழைக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். அதற்கான விதிகள் குறித்த ஆதாரம் உள்ளது.
» திமுகவினரின் அராஜகத்துக்கு துணைபோகும் போலீஸ்: பாஜக நிர்வாகி கொலையில் அண்ணாமலை கண்டனம்
» வேலூர் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர், மகன் கைது
ஆகவே, விதிமீறல் குறித்து பேசுபவர்கள் தான் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவர் பேரவைத் தலைவர் மீது அளித்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை கூடும் போது விவாதிக்கப்படும். கட்சி விவகாரங்கள் குறித்தும், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயல்பாடு குறித்தும் கட்சியின் சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்கள் குழு தலைவர்தான் கருத்துக்கூற வேண்டும்,” என்றார்.
இதேபோல் பாஜக அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை எதிரில் உள்ள இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக பேசினேன்.
துணைநிலை ஆளுநரை பாஜக எம்எல்ஏக்கள் 4 பேர் சந்திக்க வந்துள்ளது குறித்தும், சட்டப்பேரவைத் தலைவரும் சந்திக்க வந்துள்ளது குறித்தும் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என்னுடைய துறை சம்மந்தமாக சந்தித்து பேசவே நான் வந்தேன்,” என்றார்.
பாஜக எம்எல்ஏக்களான ஜான்குமார், கல்யாணசுந்தரம், விவியன் ரிச்சர்டு மற்றும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன் ஆகியோரும் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். பிறகு அவர்கள் கூறியதாவது: “துணைநிலை ஆளுநரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். தற்போது அவரை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளோம். தொகுதிகளில் நலத்திட்டம் குறித்தும் துணைநிலை ஆளுநரிடம் பேசினோம். மக்கள் அளித்த எம்எல்ஏ என்ற பதவியே போதும்.
யாரிடமும் எந்த பதவியையும் நாங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. புதுச்சேரி பேரவைத் தலைவர் கட்சி நிர்வாகத்தில் இல்லை. ஆகவே அவர் கட்சி உறுப்பினராக யார் உள்ளனர் என்பது குறித்து பேசமுடியாது. சட்டப்பேரவை கூட்டத்தின் போது புதுச்சேரி பேரவைத் தலைவரது செயல்பாடு குறித்து பேசுவோம். மக்களின் குறைகளை சுட்டிக்காட்ட எம்எல்ஏக்களுக்கு உரிமை உள்ளது. அதனடிப்படையில் நாங்கள் எங்களின் கடமைகளை செய்கிறோம்.
நாங்கள் பாஜக எம்எல்ஏக்கள் தான். பாஜக துண்டை தான் அணிந்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். புதுச்சேரியில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதனை கோவை, திருப்பதி, கொச்சி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த கேட்டுள்ளோம். புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்ததாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். அதன்படி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸூக்குத் தைரியம் உள்ளதா? என்பதை விளக்க வேண்டும்.
பதவிக்காக தேர்தலை சந்திக்காத நாராயணசாமி தான் உண்மையில் வியாபாரி. நாங்கள் தனியாக செயல்படவில்லை. எங்களுடன் நிறையபேர் உள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியே நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்,” என்றனர்.