மதுரை: 600 வருடங்கள் பழமையான பாண்டியர்கள் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், படையெடுப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தகவலும் இடம்பெற்றுள்ளது.
கொட்டாம்பட்டி அருகே கச்சிராயன்பட்டி ஊராட்சி அருவி மலை அடிவாரத்தில் உள்ள பால்குடியில் மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளையை சேர்ந்த தேவி அறிவு செல்வம், கதிரேசன், தமிழ் தாசன், கல்லானை சுந்தரம் போன்றவர்கள் மேற்கொண்ட ஆய்வில் நான்கடி உயரம் 3 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த உதயக்குமார் , முத்துப்பாண்டி இக் கல்வெட்டினை படியெடுத்தனர். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கல்வெட்டு விபரங்களை வாசித்து அளித்தார்.
இதுகுறித்து மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளையை சேர்ந்த தேவி அறிவு செல்வம் கூறியதாவது: கல்வெட்டின் கீழ் பகுதியில் அஷ்டமங்கலம் சின்னங்களில் ஒன்றான பூரண கும்பம் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் 14ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியான மதுரையில் மாலிக்காபூர் படையெடுத்து வர காரணமான சுந்தரபாண்டியன் ஆட்சி செய்தான்.
அம்மன்னனின் ஏழாம் ஆட்சியாண்டில் வைகாசி மாதம் 12ஆம் நாளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இவர் காலத்தில் மிகப்பெரிய கலகம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மேலூர் பகுதியில் குறுநில தலைவனாக தெய்வச் சிலை பெருமான் என்னும் வீர பராக்கிரம சிங்கதேவன் இருந்துள்ளான். இதில் தெய்வச் சிலை பெருமாள் ஆன வீர பராக்கிரம சிங்கதேவன் என்பவன் சுரபி நாட்டு வேத நாதித்தன் துருக்கன்மியர்க்கு அடைக்கலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது.
» காணாமல் போன பிளஸ் 1 மாணவி: இரு இளைஞர்களுடன் குளத்தில் சடலமாக மீட்பு - உடுமலையில் அதிர்ச்சி
» வேலூர் பாஜக நிர்வாகி கொலை: திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கைது
அதாவது துருக்கர் படை எடுப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளான் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. சுரபி நாடு என்று இன்றைய திருச்சுனை கருங்காலக்குடி அருவி மலை ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதியாகும். இன்று பால்குடி என்னும் பெயர் கொண்ட இவ்வூர் அருழி மலை கல்வெட்டு ஒன்றில் பாக்குடி என்று அழைக்கப்படுகிறது .இதே போல் தெய்வச்சிலை பெருமாள் வீரபராகக்கிரம சிங்கத்தேவன் அருவிமலை கல்வெட்டு ஒன்றில் இடம்பெற்றுள்ளார் .
14ஆம் நூற்றாண்டில் மதுரையில் நடைபெற்ற வரலாற்று விவரங்களை தெரிந்து கொள்ளக்கூடிய தனித்துவமான கல்வெட்டாக இதனை கருதலாம். மேலும், இவ் ஊரில் இரும்புக்காலம், பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் பதுக்கைகளும் இருக்கின்றன. பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இந்த அருவிமலையில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட கல் படுக்கைகளும், செஞ்சாந்து , ஓவியங்களும் , 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலின் எஞ்சிய பாகங்களும் உள்ளன, ’’ என்றார்.