உள்ளாட்சி தேர்தல் எப்போது? - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

27 மாவட்டங்களில் 2019ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியுடன் முடிவடைகிறது. பதவிக் காலம் முடிவடைந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், முனியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளன. இந்நிலையில், வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்.” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ஆகியோர், “வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது” என உத்தரவாதம் அளித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE