தடையை மீறி பேரணி செல்ல முயற்சி: கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது

By KU BUREAU

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். மறுநாள் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி அளித்ததற்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஷாவின் இறுதி ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த காவல் துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் நேற்று கருப்பு தின பேரணி நடத்தப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: கோவையில் 2022-ல் நடந்த கார் வெடிப்பு சம்பவம், மனித வெடிகுண்டு தாக்குதலாகும். ஆனால், தமிழக முதல்வர் இதை சிலிண்டர் வெடிப்பு என்று கூறுகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய உமர் பாரூக் தலைமையில் சத்தியமங்கலம் பகுதியில் சதிக் கூட்டம் நடந்துள்ளது. குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினும் அதில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் அவர் 750 கிலோ வெடிமருந்தை வாங்கியுள்ளார். இந்த கும்பல் கோவையில் 7 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதில், மாநகர காவல் ஆணையர் அலுவலகமும் இடம் பெற்றிருந்தது. ஒருவேளை திட்டமிட்டபடி தாக்குல் நடந்திருந்தால் காவல் துறையினரும் உயிரிழந்திருப்பர்.

தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் ஜமேஷா முபின் பேசிய 7 நிமிட வீடியோ காட்சிகள் உள்ளன. அதை வெளியிட்டால் பிரச்சினை ஏற்படும். காவல் துறையினர் சரிவரப் பணியாற்றுவதில்லை. இதை காவல் துறையில் பணியாற்றியவன் என்ற முறையில் வேதனையுடன் கூறுகிறேன். கோவையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கிளை அமைக்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவதில்லை. உயிரிழந்த பாஷாவை அப்பா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகிறார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அப்பா இல்லையா?

பிரதமர் மோடியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கோவை இருக்க வேண்டும். உதயநிதி ஒருமுறையாவது தன்னை இந்து என்று கூறிக் கொள்வாரா? கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், வாக்குக்காக பிச்சை எடுப்பவர்களை நம்ப வேண்டாம். மறதி என்பது தமிழர்களின் வியாதி.

பாஜக தொண்டர்களை அடக்கி வைத்துள்ளேன். அவர்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது என்று கூறி வருகிறோம். அதேநரத்தில், ஒருமுறை கட்டுப்பாட்டை இழந்துவிட்டால், மீண்டும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. கோவையில் வானதி சீனிவாசனுடன் சேர்த்து 6 எம்எல்ஏ-க்களை வெற்றி பெறச் செய்து, சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்றனர். இதையடுத்து, அண்ணாமலை உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE