யுஜிசி உறுப்பினர் இல்லாத 3 பல்கலைக்கழக தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

By லிஸ்பன் குமார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம், பாரதிசதாசன் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கான புதிய துணைவேந்தர் தேடுதல் குழுக்களில் யுஜிசி உறுப்பினர் இல்லாததால் அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்யும் வகையில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர் தேடுதல் குழுக்களை அமைத்தார். அதன் சட்டங்கள் மற்றும் யுஜிசி விதிமுறைகளின் படி தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யுஜிசி பிரதிநிதி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும் பாகுபாடு இல்லாமலும் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஆளுநர் தேடுதல் குழுக்களை அமைத்துள்ளார். யுஜிசி உறுப்பினருடன் கூடிய தேடுல் குழுக்களின் நியமனத்தை அரசிதழில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், உயர்கல்வித்துறை மேற்குறிப்பிட்ட 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுக்களை அமைத்து, அது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. ஆனால், அந்த தேடுதல் குழுக்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, யுஜிசி உறுப்பினர் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் அறிவிக்கைகள் யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கும் முரணானது. யுஜிசி உறுப்பினர் இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவின் தேர்வு நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும்.

பல்கலைக்கழங்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் துணைவேந்தரின் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவர்களின் நலனுக்காக துணைவேந்தர் பதவிகள் காலியாக வைக்கப்படவில்லை. அண்ணா, பாரதிதாசன், பெரியார் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுக்களை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேந்தர் அறிவுரை வழங்கியுள்ளார். யுஜிசி உறுப்பினருடன் வேந்தர் அமைத்த தேடுதல் குழுக்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கைகளை அரசிதழில் வெளியிட அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE