சென்னை: வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி விட்டல் குமார், திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி விட்டல் குமார், கடந்த டிசம்பர் 16ம் தேதி அன்று, திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த விட்டல் குமாருக்கும், வேலூர் மாவட்டம் K.V.குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டு என்ற நபருக்கும், பலமுறை வாக்குவாதங்கள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. விட்டல் குமார் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பாஜகவினர் போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில், திமுக ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டுவின் மகனின் வாகன ஓட்டுநரும், அவரது நண்பரும், இன்று நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாகத் தெரிகிறது. இதில் இருந்து, விட்டல் குமார் படுகொலையில், திமுக நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது.
திமுக-வோ, தனது கட்சியில் சமூக விரோதிகளுக்குப் பதவியும் அதிகாரமும் கொடுத்து வருகிறது. உடனடியாக, விட்டல் குமார் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் கட்சிக் காரர்கள் என்பதற்காக சமூக விரோதிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதற்கான எதிர்வினைக்கும் திமுக-வே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
» எங்கும் கொலை; எதிலும் கொலை இதுதான் திமுக ஆட்சியின் அவல நிலை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
» தீர்த்தம் குடித்த சாமியார் உள்பட 6 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி