சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்ததான் அனுமதியே தவிர, கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை. அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, ”சட்டப்பேரவையை ஒரு வருடத்துக்கு நூறு நாட்கள் நடத்த வேண்டும் என்பது தான் தமிழக அரசின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் தேர்தல், வெள்ளம் உள்ளிட்ட பிரச்சினைகளால் பேரவையை அதிக நாட்கள் நடத்த முடியவில்லை. சட்டப்பேரவை குறைந்த நாட்கள் நடந்தாலும் மக்கள் பணிகளில் எந்தக் குறையும் இல்லை. சூழலுக்கு ஏற்றபடி கூட்டத்தொடர் நடக்கும்.
ஜனவரி 6-ம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஆளுநர் கடந்த முறை, முதல் பக்கத்தையும், கடைசிப் பக்கத்தையும் மட்டுமே படித்தார். இம்முறை ஆளுநர் உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம்.
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்ததான் அனுமதியே தவிர, கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை. அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். அதோடு, இது சட்டப்பேரவைக்கும் பொருந்தும். ஆளுநருக்கு உரிய அனைத்து மரியாதைகளையும் இந்த அரசு கொடுக்கும்.
» பொங்கல் பண்டிகை நாள்களில் யுஜிசி – நெட் தேர்வுகள்: மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
» பழநி: பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 192 கிலோ தங்க நகைகள் வங்கியில் ஒப்படைப்பு
எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. யாருக்கும் பேச தடை கிடையாது. முதல்வர் ஸ்டாலின் இதை தெளிவாக வலியுறுத்தியுள்ளார்” என்று அப்பாவு கூறினார்.