பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த 192 கிலோ 984 கிராம் தங்க நகைகளை, தங்கக் கட்டிகளாக உருக்கி முதலீடு செய்யும் திட்டத்தில் வங்கி அதிகாரிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெள்ளிக்கிழமை (டிச.20) காலை ஒப்படைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில்,‘இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களில் கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்க தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும்’ என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
அதன்படி, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த 192 கிலோ 984 கிராம் தங்கத்தை ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாலா முன்னிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் திவ்ய தேஜாவிடம் இன்று வெள்ளிக்கிழமை (டிச.20) காலை அமைச்சர் சேகர் பாபு ஒப்படைத்தார்.
» சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது!
» ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
இவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சுத்த தங்க கட்டிகளாக பெற்று அவை பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். அதன் மூலம், கிடைக்கப் பெறும் வருவாய் பழநி தண்டாயுதபாணி சுவாமி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சக்கரபாணி, பழநி எம்எல்ஏ செந்தில்குமார், இந்து சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், பழநி கோயில் தக்கார் கார்த்திக், இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, சார் ஆட்சியர் கிஷன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.