சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து, அம்பேத்கரின் வரலாற்றுப் பங்களிப்பையும், சமூக நீதிக்கான அவரது போராட்டத்தையும் அவமதிப்பதாக உள்ளது. அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகப் போராட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசியிருக்கிறார்.
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 வது ஆண்டு குறித்த நிகழ்வில் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் இப்படிப் பேசி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்துவது பேஷன் ஆகிவிட்டது என்ற சொல்லாடல் அம்பேத்கர் குறித்தான அவரது பார்வையைத் தெள்ளத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது. பாஜகவைப் பொறுத்தவரை தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் மாற்றி அமைத்து மாநிலங்களின் உரிமைகள் உட்படப் பல உரிமைகளைப் பறிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் நேற்று அமித்ஷா அவர்களின் பேச்சு அமைந்துள்ளது.
தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளின் நலனைக் கருத்தில் கொண்டு தான் அம்பேத்கர் தன்னுடைய களப்பணியையும் செயல்பாட்டினையும் வகுத்துக் கொண்டார். கோடான கோடி ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் அரணாகத் திகழ்ந்த அம்பேத்கர் குறித்தான பாஜகவினரின் பார்வை கண்டிக்கத்தக்கது .
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து, பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் வரலாற்றுப் பங்களிப்பையும், சமூக நீதிக்கான அவரது போராட்டத்தையும் அவமதிப்பதாக உள்ளது. சமூக ஒற்றுமை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான அவரின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகப் போராட்டங்கள் நடத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்