திருச்சி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காதது தவறு அல்ல. ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று எப்படி விஜய் கூறலாம்? அது தவறான வார்த்தை. அப்படி சொல்லக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசி இருக்கிறார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள் இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை நாம் எப்படி நம்புவது. அயோத்தியில் கடவுள் பெயரை கூறி தான் போட்டியிட்டீர்கள் ஆனால் அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்று இருக்கிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காதது தவறு அல்ல. விஜய் மக்களை பார்க்க போனால், கூட்டம் கூடி விடும். பாதுகாப்பு அளிப்பது போலீசாருக்கும் கடினம். ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று எப்படி விஜய் கூறலாம் ? அது தவறான வார்த்தை. அப்படி சொல்லக் கூடாது. மக்களோடு மக்களாக நிற்பவர்களை அப்படி பேசுவதை ஏற்க முடியாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று விஜய் சொல்லக்கூடாது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பது தலைவர்களின் கடமை. அப்படி என்றால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களையும், கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து பாதிக்கப்படவர்களையும் விஜய் சந்தித்தது ஏன்? இதையெல்லாம் சடங்கு என்று விஜய் சொல்வாரா?” என்று சீமான் கூறியுள்ளார்.
» சென்னை ஐஐடி வளாகத்தை ஜனவரி 3, 4ம் தேதிகளில் அனைவரும் பார்வையிடலாம்: வெளியானது அறிவிப்பு