சென்னை: கேரள மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப் பதற்கு எனது கடும் கண்டனம்.
கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தான் திராணியில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார்.
வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல!. கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்; இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
» துணை வேந்தர் நியமனத்தில் முட்டுக்கட்டை: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
» கோவில்பட்டியில் வெண் பனிப் பொழிவு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு