பிரபல வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் வேங்கடாசலபதி எழுதிய 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908' என்ற நூலுக்கு 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய உலகின் கெளரவமிக்க, உயரிய விருதாக கருதப்படுகின்ற சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்ப் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஏ.ஆர்.வேங்கடாசலபதிக்கு 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908' என்ற ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13, 1908 அன்று வஉசி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது ஆங்கிலேய அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மக்கள் மீது வரி விதிக்கப்பட்டது. இந்த எழுச்சியின் போக்கை ஏராளமான சான்றுகளுடன் விவரிக்கும் இந்நூல் அதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது.
இது குறித்து வஉசி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதுடன், எழுச்சிக்கு பங்களித்த எண்ணற்ற சாதாரண மக்களின் கதையையும் புனரமைக்கிறது. இதனை கெளரவிக்கும் விதமாக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் வேங்கடாசலபதி எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, செப்புத் பட்டயம் மற்றும் தங்கப் பதக்கம் விருதாளர்களுக்கு வழங்கப்படும்.