கள்ளக்குறிச்சியில் மதுவிலக்கு போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர்? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

By KU BUREAU

கள்ளக்குறிச்சியில் இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாராயம் தடையின்றி விற்கப்பட்டு வந்துள்ளது என்றால் மதுவிலக்கு பிரிவு போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், குண்டர் தடுப்புச்சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணையை வரும் ஜன.6-க்கு தள்ளிவைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த மனுக்கள் மீது பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் ஜன.6-ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும், என்றார்.

குறுக்கிட்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் அனைவர் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது, என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், பல ஆண்டுகளாக இவர்கள் அந்தப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்ததாலும், 68 பேர் உயிரிழந்துள்ள காரணத்தாலும் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்றார்.அப்போது நீதிபதிகள், இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாராயம் தடையின்றி விற்கப்பட்டு வந்துள்ளது என்றால் மதுவிலக்கு பிரிவு போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர்?. இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது, என கருத்து தெரிவித்து இறுதி விசாரணையை வரும் ஜன.6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE