சென்னை: ஒரே நேரத்தில் 555 வர்ம சிகிச்சை நிபுணர்களை கொண்டு 555 பேருக்கு வர்ம சிகிச்சை அளித்து தேசிய சித்த மருத்துவ மருத்துவமனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை) சார்பில், சித்த மருத்துவத்தை நாடுமுழுவதும் பரப்பும் விதமாக கடந்த ஆண்டு டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை இருசக்கர வாகன தொடர் பேரணியை நடத்தப்பட்டது. 3,333 கிமீ தூரத்தினை 20 நாட்கள் கடந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலத்திலும் சித்த மருத்துவ முகாம் மற்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், சித்த மருத்துவத்தின் வர்ம மருத்துவ சிறப்புகளை உலகறிய செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துவ நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, இன்று மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 555 வர்மானிகளை (வர்ம சிகிச்சை நிபுணர்கள்) கொண்டு 555 நபர்களுக்கு தற்காப்பு வர்மமருத்துவ பரிகாரத்தினை வழங்கி சாதனை சாதனை படைத்துள்ளது. கின்னஸ் நிறுவன பிரதிநிதி வில்லியம் ராபர்ட், கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கினார். மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்த கின்னஸ் சாதனை நிகழ்வில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கொட்டேசா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மருத்துவ நிறுவனத்தின் டீன் மருத்துவர் எம்.மீனாட்சி சுந்தரம், கண்காணிப்பாளர் மருத்துவர் கிறிஸ்டியன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
» கே.வி.குப்பம் அருகே இளம் பெண்ணை கடித்துக்கொன்ற சிறுத்தை: மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை
» வனப்பாதை வழியே நடந்துவரும் ஐயப்ப பக்தர்களின் விரைவு தரிசனத்துக்காக சிறப்பு அனுமதி சீட்டு அறிமுகம்
மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி கூறியதாவது: “இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவமானது, மக்களின் உடல்நலனில் மருத்துவத்தை மட்டுமல்லாது நோய் தடுப்பு முறைகளிலும் சிறந்த மருத்துவ முறையாகும். சித்தர்களின் நுட்பமான, தனித்துவமான மருத்துவ முறைகளைக் உடல்நலத்தினை பேணிப் பாதுகாப்பதில் கொண்டு மக்களின் மேம்பட்ட பாரம்பரிய மருத்துவமாகும்.
சித்த மருத்துவத்தின் தனித்துவமான முறைகளாக விளங்கக்கூடிய காயகற்பம், வர்மம், தொக்கணம் போன்றவைகள் அதன் மகத்துவத்தையும், தொன்மையையும் பறை சாற்றுகின்றன. சித்த மருத்துவத்தில் உடனடித் தீர்வாக பயன்படுத்தப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறைதான் வர்மம் மருத்துவமாகும். வர்மக்கலை என்பது அடிமுறை தாக்குதலுக்கான பயிற்சியாகவே அனைவரும் அறிந்திருந்தாலும், தீவிர நிலை நோய்களுக்கான சிகிச்சை முறையாக சித்த மருத்துவத்தில் அறிவியல் பின்புலத்தோடு பயன்பாட்டில் இருந்து வருகிறது. மருந்தில்லா மருத்துவ வழிமுறையாக, வலிகளுக்கான மருத்துவமாக சித்த மருத்துவத்தில் வர்ம மருத்துவமானது பெரும் பங்கை வகிக்கிறது.
உடலில் உண்டாகக்கூடிய நோய்கள் பலவற்றிலும், குறிப்பாக மூளை, நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களான பக்கவாதம், முடக்கு வாதம் முதலான நோய்களுக்கும், எலும்பு சதை. மூட்டு சார்ந்த நோய்களுக்கும், வரம் மருத்துவம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடிபடுதல், விபத்துக்கள் ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கும் வர்ம மருத்துவ முறையானது பெரிதும் பலன் அளிக்க வல்லது. வர்ம மருத்துவத்தின் மூலமாக பலவிதமான நோய்களிலிருந்து குணம் பெறவாம். எவ்விதமான பொருட்செலவும், நேரவிரயமும் இல்லாமல், பெரும்பயனளிக்கக்கூடிய இந்த வர்ம மருத்துவ முறையானது மக்களிடையே பிரபலமடைய பல முயற்சிகள் நடைப்பெற்று கொண்டுள்ளது.
இந்தியாவின் தென் கோடியில் உள்ள ஒரு சில இடங்களில் மட்டுமே பழக்கத்தில் உள்ள ஒரு சிறப்பு வாய்ந்த இந்த வர்ம மருத்துவ முறையானது உலக மக்கள் அனைவருக்கும் பயன் அளிக்க கூடிய வகையில் வளர வேண்டும். தமிழரின் ஆழ்ந்த அறிவியல் தொழில்நுட்பங்கள், வாழ்வியல் நெறிமுறைகள், உடல் நலம் சார்ந்த தொலைநோக்கு பார்வை, மேம்பட்ட திறன் வளர்ச்சி ஆகியவை உலகத்தார் முன் நிரூபணம் செய்யப்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.