கே.வி.குப்பம் அருகே இளம் பெண்ணை கடித்துக்கொன்ற சிறுத்தை: மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை

By KU BUREAU

வேலூர்: கே.வி.குப்பம் அருகே துருவம் காப்புக்காட்டையொட்டி வசித்துவந்த இளம்பெண்ணை சிறுத்தை கடித்து கொன்றது. அந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை செய்த நிலையில் இறந்த இளம் பெண்ணின் உடலை ஒப்படைக்க பொதுமக்கள் மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்துள்ள மேல்மாயில் கொல்லைமேடு துருவம் பகுதி உள்ளது. இது தமிழக ஆந்திர எல்லையோர வனப்பகுதியாக அமைந்துள்ளது. இங்குள்ள காப்புக்காட்டையொட்டி சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஞ்சலி (22) என்பவர் புதன்கிழமை (டிச.18) மாலை 4 மணியளவில் வீட்டின் அருகே இருந்தார். அப்போது, அருகில் உள்ள காப்புக்காட்டின் புதரில் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஒன்று அஞ்சலியை திடீரென தாக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அஞ்சலி கூச்சலிட்டார். அதற்குள் அந்த சிறுத்தை அஞ்சலியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

அஞ்சலியின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வனப்பகுதிக்குள் விரட்டிச் சென்றனர். அதற்குள் சிறுத்தை அஞ்சலியின் உடலை மட்டும் விட்டுவிட்டு ஓடியது. இறந்த நிலையில் அஞ்சலியின் உடலை பொதுமக்கள் மீட்டனர். இந்த தகவலை அடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா மற்றும் குடியாத்தம் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கே.வி.குப்பம் காவல் துறையினர் துருவம் பகுதிக்கு விரைந்தனர். மேலும், இறந்த அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

ஆனால், அஞ்சலியின் உடலை ஒப்படைக்க மறுத்து அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதை உடனடியாக செய்துகொடுத்தால் மட்டுமே உடலை ஒப்படைப்போம் என்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இரவு 8 மணி வரை அஞ்சலியின் உடலை மீட்க முடியாத நிலையில் பொதுமக்களிடம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘துருவம் கிராமத்துக்கு சாலை வசதி கேட்டுள்ளனர். இடைப்பட்ட பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அதுகுறித்து விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும், தெருவிளக்கு வசதி கேட்டுள்ளனர். மேல்மாயில் கிராமம் வரை வரும் அரசுப் பேருந்தை துருகம் வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அந்த பேருந்தும் காலை 11 மணிக்கும் பகல் 3 மணிக்கு வருவதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்ல வசதியாக காலை 7 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இயக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

கிராமத்துக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர், வருவாய் கோட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் அடங்கிய குழுவு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளோம். மேலும், வனத்துறை மூலம் இழப்பீடு வழங்கவும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE