புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்க கடற்கரையில் கொண்டாட்டம் நடப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி சத்தியசுந்தரம் ஆய்வு செய்தார். பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபடவுள்ளதாக இன்று தெரிவித்தார்.
புத்தாண்டு பிறக்க இரண்டு வாரங்களே உள்ளன. புத்தாண்டை கொண்டாட நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகள் குவிவார்கள். ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 31ம் தேதி இரவு சுற்றுலா பயணிகள் புதுவை கடற்கரை சாலையில் மாலை முதல் ஒன்று கூடுவார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் கடற்கரை சாலையில் திரள்வார்கள்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை பல்வேறு ஆலோசனை நடத்தி வருகிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தும் இடம், கடற்கரை சாலைக்கு வரும் வழிகள், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து தடையின்றி திரும்பிச்செல்லும் வழிகள், ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்து இன்று காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) சத்தியசுந்தரம் கடற்கரை சாலையில் ஆய்வு செய்தார்.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர்கள் கலைவாணன், நாரா சைதன்யா ஆகியோருடன் இணைந்து பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளையும், வரைபடம் மூலம் இடங்களையும், அடையாளப்படுத்தி பார்வையிட்டார். கடந்த ஆண்டு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆண்டு கூடுதலாக கடற்கரை சாலையில் பாதுகாப்பு அளிக்கவும், நெரிசலின்றி மக்கள் வெளியேறவும் ஏற்பாடுகளை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
» சாத்தனூர் அணை பகுதியில் நடமாடிய முதலை - அச்சத்தில் பொதுமக்கள்!
» அமித்ஷா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கண்டனம்
ஆய்வுக்குப் பின் டிஐஜி கூறியதாவது: “புத்தாண்டு தினத்தின் முதல் நாளில் கடற்கரை சாலை செல்லும் ஒயிட் டவுன் பகுதி சாலைகள் முழுவதும் வாகனங்கள் தடை செய்யப்படும். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு 6 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஒயிட் டவுன் பகுதியில் வசிப்பவர்கள் தடையின்றி செல்வதற்கு காவல்துறை சார்பில் அடையாள அட்டை (பாஸ்) வழங்கப்படும்.
அதன்படி அடையாள அட்டைக்குரியவர்களது வாகனங்கள் மட்டுமே ஒயிட்டவுனுக்குள் அனுமதிக்கப்படும். வரும் புத்தாண்டில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கடற்கரை சாலையில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அங்கு உயர்கோபுரங்கள் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருபவர்கள் கடலில் இறங்கி குளிப்பதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் கடலோர காவல்படை போலீஸார்நிறுத்தப்படவுள்ளனர். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடங்கள் நடைபெறும் அனைத்து கடற்கரைகளிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
கூட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் 3 பசுமைப்பகுதிகள் அமைத்து, அங்கு மீட்புப் பிரிவு, தீயணைப்புப் பிரிவு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. தனியார் விடுதிகள் அரசிடம் அனுமதி பெற்ற நேரங்களில் மட்டுமே புத்தாண்டின் போது செயல்படுகிறதா என்பதையும் கண்காணிப்போம்” என்று குறிப்பிட்டார்.