தஞ்சாவூர் | பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்பு: உடனடி கணக்கெடுப்பு நடத்த விவசாயிகள் வலியுறுத்தல்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: பயிர்க் காப்பீடு செய்த சம்பா நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தற்போது பெய்த தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், மகசூல் பெருமளவு குறைய வாய்ப்புள்ளதால், ஜனவரி மாதம் வரை காத்திருக்காமல், பயிர் பாதிப்பு கணக்கெடுப்பை உடனே மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு மற்றும் விவசாயிகள் செலுத்தும் பிரீமியத்தை கொண்டு, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயிர்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துகின்றன.

தமிழகத்தில் காரீப் என்பது குறுவை பருவமாகவும், ராஃபி என்பது சம்பா, தாளடி பருவமாகவும் உள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த குறுவைப் பருவத்தில் எவ்வித பேரிடரும் நேரிடவில்லை. அதைத்தொடர்ந்து, வேளாண் துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் சம்பா, தாளடி பருவத்துக்கு, கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் இறுதி வரை டெல்டா மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். இதன்மூலம் பல கோடி ரூபாயை பிரீமியமாக செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், டிச.11 முதல் டிச.13 வரை டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையில் அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழை நின்ற பிறகும் பெரும்பாலான இடங்களில் வயல்களில் தேங்கிய நீர் வடியாததால் வைக்கோல்கள் அழுகி, நெல்மணிகள் முளைக்கவும், கதிரில் இருந்து நெல்மணிகள் உதிர்ந்தும் வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

ஆனால், ராஃபி பருவத்துக்கு பயிர்க் காப்பீடு செய்தால், ஜனவரி மாதத்தில்தான் சோதனை அறுவடையை பயிர்க் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடங்கும். இது, தற்போது பெய்த மழையில் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பொருந்த வாய்ப்பில்லை. இதனால், பயிர்க் காப்பீடு செலுத்திய நிலையில், பயிர்களும் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு வழக்கம்போலவே எடுக்கப்படும் என்ற தகவல் விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

எனவே, தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்து மழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா நெல் குறித்த கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் சுந்தர.விமல்நாதன் கூறியது: திருத்தி அமைக்கப்பட்ட பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ், வருவாய் கிராமங்களின் அடிப்படையில் சோதனை அறுவடையை அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்வது வழக்கம். இது, புள்ளியியல்- வேளாண்- வருவாய் துறைகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம், தொடர்புடைய விவசாயிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

ராஃபி பருவத்தை பொறுத்தவரை ஜனவரியில் சோதனை அறுவடை மற்றும் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு தொடங்கி மார்ச் இறுதியில் முடிப்பது வழக்கம். ஆனால், அதற்கு முன்பாக தற்போதே இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக கணக்கெடுப்பை நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.பயிர்க் காப்பீடு திட்டத்தில் உள்ள விதிமுறைகள் அனைத்தும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளதால், அதில் திருத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, வருவாய் கிராம அளவில் ஏற்படும் பாதிப்புக்கு மட்டுமே இழப்பீடு என்ற விதியை மாற்றி, தனிநபர் பாதிக்கப்பட்டாலும் உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என்றார்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியது: தற்போது பல இடங்களில் சம்பா நெல் நீரில் மூழ்கியுள்ளது. 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டால் பயிர்க் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும். பயிர்க் காப்பீடு திட்டத்தில் சோதனை அறுவடை ஜனவரியில்தான் தொடங்கும். தற்போது பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE