பாலியல் வழக்கை ரத்து செய்ய மறுப்பு: சிவகங்கை சிறுமிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: சிவகங்கையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கை ரத்து செய்ய மறுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ரமேஷ் என்ற சாந்திநாதன், தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி நிர்மல்குமார் விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், "மனுதாரர் மீது தவறுதலாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்துள்ளது. இந்த சூழலில் ஒரு நாள் கடைக்கு தாமதமாக வந்ததற்காக பாதிக்கப்பட்ட சிறுமியை மனுதாரர் திட்டியுள்ளார். இதன் காரணமாக அழுது கொண்டே அந்த சிறுமி சென்ற நிலையில், அவரிடம் முறையாக விசாரிக்காமல் தவறுதலாக புரிந்து கொண்டு இந்த புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என கூறினார்.

அரசு தரப்பில், "மனுதாரர் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. மனுதாரருக்கு எதிராகவே ஆதாரங்கள் உள்ளன. எனவே வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதி, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. விசாரணை நீதிமன்றம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கான இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் பெற்றுத் தரவும் வேண்டும். சிறுமி இழப்பீட்டு தொகையை எவ்விதமான தாமதமும் இன்றி 3 வாரத்தில் பெறுவதை அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE