மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய், பூங்கா பாதுகாப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த பொழிலன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,"மதுரை வண்டியூர் கண்மாயை அழகுபடுத்தும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பூங்காவுக்குள் 40 உணவு கடைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், பூங்காவுக்குள் உணவு கடைகள் கட்டுமானத்துக்கு தடை விதித்தது.
இந்நிலையில், வண்டியூர் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என மணி பாரதி என்பவர் மனு தாக்கல் செய்தார். இரு மனுக்களும் நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வண்டியூர் கண்மாய் பகுதியில் தரிசு நிலங்கள் என வருவாய் ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. என வாதிடப்பட்டது.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் வாத்திடுகையில், வண்டியூர் கண்மாய் கரையில் நடைபயிற்சி, படகு குழாம், கண்மாய் அழகை ரசிக்கும் வகையில் பூங்காவில் பார்வையாளர்கள் உட்காருவதற்கான வசதிகள், யோகா மையம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
» அமித்ஷா தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தி விட்டார்: அம்பேத்கர் கருத்துக்கு திருமாவளவன் சீற்றம்
» அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படி சிதைக்கலாம் என அலையும் பாசிஸ்ட்டுகள்: உதயநிதி சுளீர்!
அங்கு இயற்கையாக விளைந்த உணவு பொருட்கள் விற்கவும் ஏற்பாடு செய்யபடுகிறது. இவை எதுவும் வணிக நோக்கத்திலான நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் பொழுது போக்குவதற்கான ஏற்பாடுகள் மட்டுமே அங்கு நடைபெறுகிறது எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.