ஒரே நாடு ஒரே தேர்தல் முறை ஜனநாயக முறைப்படி கொண்டுவரப்பட்டுள்ளது. சில மாநில ஆட்சிகளை காங்கிரஸ் கலைத்ததாலேயே இந்த தேர்தல் முறை மாறியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 1971-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கீட்டின்படி 543 எம்.பி.க்கள் உள்ளனர். அதன் பின்னர் அண்டை நாட்டில் இருந்து மக்கள் வந்தததால் சில பிரச்சினைகள் உருவாகியது. இதனால் எம்.பி.க்களின் எண்ணிக்கையை 30 ஆண்டுகள் அதிகரிக்க மாட்டோம் என்று அப்போதைய அரசு அறிவித்தது. 2001-ல் இது மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. 2026-ம் ஆண்டுடன் இந்த அறிவிப்பு நிறைவடைகிறது.
இதையொட்டி, நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்வாகும் அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். 2031-ல் நடைபெறும் தேர்தலில் பொறுப்பேற்கும் ஆட்சி 2034 வரை மட்டுமே இருக்கும். அதாவது, 2034 முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமலாகும். இதற்கிடையே, ஆட்சி கலைக்கப்பட்டால், 5 ஆண்டுகள் இடைவெளியை நிரப்பும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டு அரசு அமையும். இதன் மூலம் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு தொந்தரு இருக்காது.
இந்த திட்டம் யாருக்கு எதிராகவும் கொண்டு வரப்படவில்லை. அரசியல் கட்சியினர் இதை தவறாகப் புரிந்துள்ளனர். 1951, 1957, 1962, 1967-ம் ஆண்டுகளில் ஒரே நாடு ஒரே தேர்தல்தான் நடைபெற்றது. பிறகு சில மாநில ஆட்சிகளை காங்கிரஸ் கலைத்ததால்தான் தேர்தல் நேரமும், காலமும் மாறியது. ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் வளர்ச்சி அரசியல் உருவாகும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி `நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்துக்கு மக்களின் வரவேற்பும் உள்ளது. இது ஜனநாயக முறைப்படி கொண்டு வரப்பட்டுள்ளது. இத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. அப்போது பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடும்.
» பழனிசாமியால் 2026-க்கு பிறகு அதிமுகவுக்கு மூடுவிழா நடைபெறும் - டிடிவி தினகரன்
» தாராபுரம் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது சிறுவன் உயிரிழப்பு
எனவே, மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன். இது எந்த வகையில் மாநில உரிமையைப் பறிக்கிறது என்பதை கனிமொழி கூற வேண்டும். மேலும், தேர்தலுக்கான செலவு, தேர்தல் நடத்தை விதிகள், பிரச்சாரம் போன்றவற்றை டி.ஆர்.பாலு கருத்தில் கொள்ள வேண்டும். மாநிலத்திலும், மத்தியிலும் யாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவுடனான கூட்டணி விவகாரத்தில் நேரமும் காலமும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.