‘திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வர வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரையில் நேற்று அமமுக 10 சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும்போதுதான் முழு விவரம் தெரியவரும். மத்திய அரசு அதிமுகவை அழிக்க வேண்டுமெனக் கருதவில்லை. தமிழகத்தில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் எனவும், ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜக தலைவர்களின் எண்ணமாகும். பழனிச்சாமிக்கு அதிமுகவிலேயே எதிர்ப்புகள் உள்ளன. அவரது செயல்பாட்டால் 2026-க்கு பிறகு அதிமுகவுக்கு மூடுவிழா நடைபெறும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று பழனிசாமி கூறுவது நம்பிக்கையுடன் பேசுவதாகத் தெரியவில்லை., மூடநம்பிக்கையுடன் பேசுவதுபோல உள்ளது. அவரது செயல்பாடுகள் தேர்தலின்போது திமுகவுக்குத்தான் உதவியாக இருக்கும்.
சட்டப்பேரவைப் தேர்தலுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வர உள்ளன. முதல்முறையாக கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்த உள்ளோம். அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி இருப்பது தற்காலிகம்தான். மக்கள் மன்றத்தில் தோல்விகளைத்தான் சந்திக்கிறார். அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையமும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமென்றால், பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வர வேண்டும். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.
» தாராபுரம் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது சிறுவன் உயிரிழப்பு
» கரூர் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம்: போலீஸார் விசாரணை