தரங்கம்பாடியில் கடல் சீற்றம் - டேனிஷ் கோட்டை தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம்

By வீ.தமிழன்பன்

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் இன்று(டிச.17) கடுமையான கடல் சீற்றம் காணப்பட்ட நிலையில், அலைகள் தொடர்ச்சியாக வந்து மோதியதால் வரலாற்றுச் சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டை தடுப்புச் சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது.

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதிலுமே இன்று காலை முதல் குளிருடன், தொடர்ந்து மேக மூட்டமாகவே காணப்பட்டது. பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாகவும், கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தரங்கம்பாடியில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.
தரங்கம்பாடியில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.
தரங்கம்பாடியில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 16-ம் தேதி இரவு முதல், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் மீனவர்கள் இன்று மீன்பிடி தொழிலுக்குச் செல்லவில்லை. மேலும் ஏற்கனவே தொழிலுக்குச் சென்ற மீனவர்களும், மீன் வளத்துறை எச்சரிக்கையை அடுத்து கரை திரும்ப தொடங்கியுள்ளனர்.

கடல் அலைகள் மோதியதால் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தடுப்புச் சுவரில் ஏற்பட்டுள்ள சேதம்.

இந்நிலையில் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள, தடுப்புச் சுவரின் மீது கடல் அலைகள் தொடர்ந்து வந்து மோதின. இதன் காரணமாக தடுப்புச் சுவரின் ஒரு பகுதியில் கற்கள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது. மேலும் கோட்டையையொட்டி மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE