அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா - பாஜகவுக்கு திருமாவளவன் கண்டனம்

By KU BUREAU

சென்னை: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில், ஒரே நேரத்தில் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தலை நடத்தவதற்கான மசோதாவை பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளைச் சிதைக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு மக்களவையில் அரசமைப்புச் சட்டத்தையும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் போற்றிப் புகழ்ந்து பாராட்டிய பாஜகவினர், இன்று மனசாட்சி உறுத்தலே இல்லாமல், அரசமைப்புச் சட்டத்தின் மீது கொடுந்தாக்குதல் நடத்தும் வகையில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் வகையில், ஒரே நேரத்தில் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தலை நடத்தவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தினர்.

இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளைச் சிதைக்கும் மிக மோசமான உள்நோக்கம் கொண்டதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஐந்தாண்டுகளுக்கு இடையூறின்றி ஆட்சி நிர்வாகம் செய்ய வேண்டுமென்பதே இன்றை ஆட்சியாளர்களின் உண்மை நோக்கமாகும். மாநிலம் சார்ந்த உணர்வுகளை நசுக்குவதும், மாநில உரிமைகளைப் பறிப்பதும், மாநிலக் கட்சிகளை மெல்ல மெல்ல ஒழிப்பதும்; இன்றைய நாடாளுமன்ற சனநாயக முறையை ஒழித்து அதிபர் ஆட்சிமுறைக்கு மாற்றுவதும்; அதன் வழி நாட்டை அரச மதம் கொண்டதொரு மதசார்புள்ள தேசமாக கட்டமைப்பதும் தான் அவர்களின் இறுதி நோக்கமாகும்.

அம்மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததனால், அதனை "நாடாளுமன்ற கூட்டுக்குழு" விசாரணைக்கு அனுப்பி, தற்போதைக்கு ஆறப்போட்டுள்ளனர். விசிக சார்பில் நமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வாய்ப்புக் கேட்டும் கிட்டவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது. இதனை முற்றாகத் திரும்பப் பெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அரசமைப்புச் சட்டத்துக்கு வேட்டு வைக்கும் பாஜகவின் இந்த ஆபத்தான முயற்சியை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று திருமாவளவன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE