தமிழகத்தில் குப்பைக் கழிவுகளை கொட்டும் கேரள அரசு - திமுக அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழகத்தை மாற்றிய திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசியின் பல்வேறு பகுதிகளில் அம்மாநிலத்தின் ஏராளமான இறைச்சி மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தை குப்பைக் கிடங்காக பயன்படுத்தி மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களின் நீர்நிலைகளுக்கு அருகே கொட்டிவரும் கேரள அரசால், அந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளும், பக்க விளைவுகளும் ஏற்படுவதோடு இயற்கை வளங்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் விதிகளுக்கு மாறாக மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்து கொண்டு வருவதாக கடந்த ஆண்டு கூறிய திமுக அரசு, அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் விதிகளுக்கு மாறாக மருத்துவக் கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்காக பயன்படுத்திவரும் கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, இனிவரும் காலங்களில் சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்’ என்று தினகரன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE