சிவகங்கை மாவட்டத்தில் 5 கண்மாய்களில் ஆக்கிரமிப்பு: 3 மாதத்தில் அகற்ற நீதிபதி உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் 5 கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாதத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் முத்துவன் திடல் பகுதியைச் சேர்ந்த கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "எங்கள் கிராமத்தினர் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பெரிய கண்மாய் , திருமனேந்தல் கண்மாய், சின்ன கண்மாய் ஆகியவற்றை நம்பியுள்ளனர். இந்த கண்மாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, தென்னந்தோப்பாக மாற்றியுள்ளனர். தங்கள் விளைநிலங்களுக்கு கண்மாய் நீரை மோட்டார் வைத்து உறிஞ்சி பயன்படுத்துகின்றனர்.

இதனால் மற்ற விவசாயிகளின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய் நீரை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சரி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "சம்பந்தப்பட்ட கண்மாய் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது. அதனை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "நீர்நிலை பகுதி மற்றும் கண்மாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய விதிகளை பின்பற்றி நோட்டீஸ் வழங்கி, முறையாக அளவீடு செய்து கண்மாய் ஆக்கிரமிப்புகளை 3 மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE